20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பு (காணொளி)

Tuesday, 22 September 2020 - 11:59

20%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
எதிர்கட்சியினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அரசியலமைப்பின் 20ம் திருத்த சட்டமூலம் நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியினால் நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

கையில் கருப்பு பட்டியை அணிந்திருந்தவாறு எதிர்கட்சியினர் எதிர்ப்பினை வெளியிட்டனர்.

20 ஆம் திருத்தச்சட்ட மூலம் நாடாளுமன்றில் நீதியமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, அதற்கு எதிர்ப்பினை தெரிவித்ததார்.

எவ்வாறிருப்பினும், சட்டமூலத்தினை நீதியமைச்சர் சபையில் முன்வைத்தார்.

இதன்போது, எதிர்கட்சியினர் கூச்சலிட்டதுடன் சபைக்கு நடுவே பிரவேசித்து தங்களது எதிர்பினை தெரிவித்தனர்.

இதனையடுத்து ஆளுந்தரப்பினர் சபையில்; கருத்துக்களை முன்வைத்து வருகின்றபோதும், அதற்கு எதிர்கட்சியினர் தொடர்ந்தும் கூச்சலிட்டு எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி, உத்தேச 20ம் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதுடன், செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி அது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.

அன்றைய தினம் முதல் 20 ஆம் திருத்தச் சட்டமூல வரைவிற்கு எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பை தொடர்ந்தும் வெளியிட்டு வருகின்றனர்.

அத்துடன், ஆளுந்தரப்புக்குள்ளும் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, 20ம் திருத்தச் சட்டமூல வரைவு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக பிரதமரினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

ஆளுந்தரப்புக்குள் ஏற்பட்ட இணக்கமின்மை காரணமாக, 20 ஆம் திருத்தச் சட்டமூல வர்த்தமானியை நாடாளுமன்றில் சமர்ப்பிக்காமல், புதிய வர்த்தமானியை வெளியிடுவதற்கும் எதிர்பார்க்கப்பட்டது.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத்தொடரின் ஆரம்ப அமர்வில் உரையாற்றியிருந்த மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட், 20ஆம் திருத்தச் சட்டமூல வரைவு தொடர்பில் கரிசனை வெளியிட்டிருந்தார்.

எவ்வாறிருப்பினும், 20 ஆம் திருத்தச் சட்டமூல வரைவு தொடர்பான பணியானது, முழுமையான ஜனநாயக முறைமையூடாக இடம்பெறும் என்று, ஜெனிவா கூட்டத்தொடரில் உரையாற்றியிருந்த ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பதில் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தயானி மெண்டிஸ் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான பின்னணிக்கு மத்தியில், பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றன் பின்னர், மாற்றங்கள் எதுவுமின்றி, அந்த வர்த்தமானி தொடர்பான பிரேரணையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச் சட்டமூல வரைவு, இன்றைய தினம் முதலாம் வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதுடன் பின்னர், அதனை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றம் செல்ல வேண்டுமாயின் அதற்காக 7 நாட்கள் வழங்கப்படும்.

அவ்வாறு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டால், நீதிமன்ற செயற்பாடுகளுக்காக 3 வாரகாலப்பகுதி வழங்கப்படும்.

நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னரே இரண்டாம் வாசிப்பிற்காக அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.