64 காவற்துறை பகுதிகளுக்கு தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு- சலுகைக் காலம் இன்று இரவுடன் நிறைவு

Monday, 26 October 2020 - 19:26

64+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-+%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்ட சலுகைக் காலம் இன்று இரவு 10 மணியுடன் நிறைவடைகிறது.

அதேநேரம் கொவிட்19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 64 காவற்துறை அதிகாரப் பிரதேசங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தாலும் கம்பஹா மாவட்டத்தின் மக்களுக்கு இன்று காலை 8 மணி முதல், அத்தியாவசிய பொருட்கொள்வனவில் ஈடுபட அனுமதிக்கப்பட்டது.

அத்துடன் அந்த பகுதிகளில் இன்று அரச மற்றும் தனியார் வங்கிகளும் இயங்கின.

எவ்வாறாயினும் இந்த காலப்பகுதியில் பொருட்கொள்வனவில் ஈடுபட்டிருந்த மக்கள் மத்தியில் சுகாதார அறிவுறுத்தல்கள் போதிய அளவுக்கு பின்பற்றப்படாத நிலைமையை அவதானிக்க முடிந்ததாக, எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

நேற்று மாலை 6 மணியில் இருந்து கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிக்கடை ஆகிய காவற்துறை அதிகாரப் பிரதேசங்களில் மறுஅறிவித்தல் வரும் வரையில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டது.

இதன்ப கொழும்பு மாவட்டத்தில் 18 காவற்துறை அதிகாரப் பிரதேசங்களில் தற்போது ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கிறது.

இதேவேளை, கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய காவற்துறை அதிகாரப் பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, கொழும்பில் இருந்து தூரப்பிரதேசங்களுக்கு செல்கின்ற பேருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.

எனினும் வெளிமாவட்டங்களில் இருந்து கொழும்பு நகருக்கு பயணிக்கும் பேருந்துகள், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள பிரதேசங்களின் எல்லைகளில் நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்க முடியும் என தேசிய போக்குவரத்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பில் பயணங்களை ஆரம்பிக்கும் தூர பிரதேசங்களுக்கான அனைத்து அரச மற்றும் தனியார் பேருந்துகளின் சேவைகளும் இன்று முதல் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியபோது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிருண்டா இதனைத் தெரிவித்தாhர்.

புறக்கோட்டை பெஸ்ரியன் மாவத்தை பயணிகள் முனையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காலி வீதியில் பயணிக்கும் பேருந்துகள், கொள்ளுப்பிட்டி பகுதியில் நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்க முடியும்.

கண்டி பகுதியில் இருந்து பயணிக்கும் பேருந்துகள், இந்தப் பகுதிக்குள் உள்நுழைய முடியாது.

ஆகையினால், புறக்கோட்டைக்கு வெளியே உள்ள பகுதிகளில் பேருந்துகளை நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்க முடியும்.

இதேநேரம், அதிவேக நெடுஞ்சாலை கொட்டாவை மற்றும் கடுவலைக்கு பேருந்துகள் பயணிக்க முடியும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிருண்டா தெரிவித்தாhர்.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்காகவும், அலுவலக பணிகளில் ஈடுபடுபவர்களுக்காகவும் தொடருந்து மற்றும் பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரில் போக்குவரத்து பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எனினும், அலுவலகங்களை ஆரம்பிக்கும் மற்றும் நிறைவுசெய்யும் நேரங்களில் சில பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன.

இதேநேரம், பரீட்சைகள் இடம்பெறுகின்றமையினால், குறிப்பிட்ட நேரங்களில் மாணவர்களுக்கு போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக பேருந்துகளும், தொடருந்துகளும் இணைந்த சேவையை முன்னெடுப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொவிட்19 கட்டுப்பாட்டுக்காக விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் காரணமாக தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறியுள்ளார்.

ஆசனங்களுக்கு அமைவாக பயணிகளை ஏற்றிச்செல்வதில் சிக்கல் இருக்கிறது.

அல்லது அதற்கு மாற்றீடாக தற்காலிகமாக பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.

ஆனால் தங்களது கோரிக்கை செவிசாய்க்கப்படவில்லை என்பதால், ஊரடங்கு அமுலில் இருக்கின்ற பிரதேசங்களில் தனியார் பேருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ஏனைய பகுதிகளில் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணாக்கர்களின் நலன்கருதி பேருந்து சேவை இடம்பெறுகின்றன என்று அவர் கூறினார்.

இதேவேளை, கொழும்பில் மக்கள் அதிகம் ஒன்றுக்கூடுகின்ற இடங்களில் தொற்றுநீஙக்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின.

இதன்படி புறக்கோட்டை மெனிங்சந்தை, மத்திய மற்றும் பெஸ்ரியன் மாவத்தை பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்கள் இன்று தொற்று நீக்கம் செய்யப்பட்டன.

கொவிட்19 பரவலை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்று இந்த பணிகளை கண்காணித்த மேல்மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.