கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒரே நாளில் மூவர் உயிரிழப்பு

Tuesday, 27 October 2020 - 19:44

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கொவிட்-19 தொற்றுறுதியான மூன்று பேர் இன்று உயிரிழந்தனர்.

இலங்கையில் கொவிட்-19 காரணமாக நாளொன்றில் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை இதுவே முதற் தடவையாகும்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 19 வயதுடைய ஒருவரும் அடங்கியுள்ளார்.

வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞர், விசேட தேவை உடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு 2 பகுதியை சேர்ந்த 75 வயதுடைய ஒருவரும் இன்று உயிரிழந்தார்.

இறுதியாக உயிரிழந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜயருவாண் பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் இன்று உயிரிழந்தார்.

ஜா-எல பகுதியை சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

அவர் ராமக வைத்தியசாலையில் இருந்து நேற்று முன்தினம் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தநிலையில், இன்று உயிரிழந்ததாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் 19ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் மேலும் 293 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

புதிதாக கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டவர்களில் இருவர் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்தவர்கள்.

ஏனைய 291 பேரும், கொவிட்19 நோயாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் இதுவரையில் 8 ஆயிரத்து 706 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுறுதியான 4 ஆயிரத்து 647 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேநேரம் பிரெண்டிக்ஸ் மற்றும் பேலிகொடை ஆகிய கொரோனா கொத்தணிகளில் இருந்து அடையாளம் காணப்பட்ட கொவிட்19 நோயாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 232 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 110 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய தொற்றுறுதியான 4 ஆயிரத்து 43 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, பூண்டுலோயா ஹெரோ கீழ்ப்பிரிவை சேர்ந்த ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர் பேலியாகொடை மீன் சந்தையில் பணியாற்றியவர் என பூண்டுலோயா பொது சுகாதார பரிசோதகர் கே.டி.டி.மதுசங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஹட்டன் நகரம் மீள் அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.

அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குப்பட்ட பகுதியில் இதுவரையில் 13 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய, குறித்த பிரிவிற்கு உட்பட்ட ஹட்டன் பகுதியில் இதுவரையில் 11 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பதில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எஸ். காமதேவன் குறிப்பிட்டார்.

அவர்களுடன் நேரடி தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை அக்கரப்பத்தனை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட ஆக்ரோயா தோட்டப்பகுதியில் ஒருவருக்கு தொற்றுதியாகியுள்ளது.

பேலியாகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 23 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் குறித்த பகுதியில் தற்போது தொற்று நீக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தலைவர் குறிப்பிட்டார்.

இதேவேளை பதுளை - ஹப்புத்தளை தோட்டப் பகுதியில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக ஹப்புத்தளை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

பேலியகொடை மீன் சந்தையில் பணியாற்றிய ஒருவருக்கே இவ்வாறு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், அவருடன் தொடர்புடைய மூன்று குடும்பங்களை சேர்ந்த 16 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு அந்த பகுதியில் தொற்று நீக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஹப்புத்தளை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

இதேவேளை மட்டக்களப்பு, முரக்கோட்டாஞ்சேனை பகுதியில் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

வாழைச்சேனை துறைமுகத்திற்கு சென்றிருந்த ஒருவருக்கே கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தி பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கிடையில், கொவிட்19 நோயாளர்கள் அதிகரித்தநிலையில், மாவனெல்ல, ஹிங்குல் ஓய மற்றும் முருத்தவெல ஆகிய பிரதேசங்களில் தற்காலிகமாக நடமாட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தில் இதுவரையில் 39 கொவிட்19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

இதேவேளை இவ்வாறான நிலைமை அபாயகரமானதென சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜயருவாண் பண்டார தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இலங்கையில் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

எதிர்வரும் நாட்களை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டியது அவசியமானதாகும்.

கொவிட்-19 தொடர்பில் சர்வதேச ரீதியாக வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் வயதானவர்களுக்கே அதிக அச்சுறுத்தல் காணப்படுகின்றது.

எனினும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் தற்போது இளைஞர், யுவதிகளின் உயிரிழப்பும் பதிவாகியுள்ளது.

தற்போது 19 வயதுடைய இளைஞர் கொவிட்-19 காரணமாக உயிரிழந்துள்ளாராயின் அந்த நிலைமை இலங்கைக்கும் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் வைத்தியர்களுக்கும் காணப்படுவதாகவும் சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜயருவாண் பண்டார தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் கொழும்பு – புறக்கோட்டையின் நான்காம் குறுக்குத்தெருவில் உள்ள மொத்தவிற்பனை நிலையங்களை திறந்து பொருட்களை விநியோகிக்க இன்று அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இடம்பெறுகின்ற, கொழும்பு கோட்டையில் இருந்து ஆரம்பமாகும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான தூரப்பயண பேருந்து சேவைகள், மாக்கும்புர பொக்குவரத்து சேவை மத்திய நிலையத்தில் இருந்து இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி காலி, மாத்தறை, ஹம்பாந்தொட்டை, தங்கல்ல, எம்பிலிப்பிட்டி மற்றும் கதிர்காமம் ஆகிய பிரதேசங்களுக்கான பேருந்து சேவைகள் இடம்பெறுகின்றன.

இதற்கிடையில் மேல் மாகாணத்தில் கொவிட்பரவல் தொடர்பாக கண்காணிப்பதற்கான இணையத்தளம் ஒன்று, மேல் மாகாண ஆளுனர் ரொஷான் குணதிலகவின் ஆலோசனை அடிப்படையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips