சென்னையை தவிர இந்தியாவின் ஏனைய பிரதேசங்களில், இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் பங்கு கொள்ளும் இலங்கை வீரர்களது பாதுகாப்பிற்கு இந்திய மத்திய அரசாங்கம் உறுதி வழங்கியுள்ளது.
விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு அமைச்சின் ஊடாக நேற்று இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்கு அமைய இந்திய பிரிமியர் லீக் போட்டிகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள மைதானங்களில், இலங்கை வீரர்கள் தமது விருப்பத்திற்கு இணங்க விளையாட முடியும் எனவும் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.
இதனிடையே, இந்த முறை இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் பங்குகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை இலங்கை அணியின் இருபதுக்கு 20 போட்டிகளின் புதிய தலைவர் தினேஷ் சந்திமால் நிராகரித்துள்ளார்.
சந்திமால் இந்த முறை ஐ.பீ.எல். போட்டிகளுக்காக தெரிவு செய்யப்பட்ட முதல் 13 வீரர்களில் உள்ளடங்கவில்லை.
இந்த நிலையில், அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மைக்கல் கிளார்க் காயம் காரணமாக விலகியநிலையில், தமது அணியுடன் இணைந்து கொள்ளுமாறு பூனே வொரியேஸ் அழைப்பு விடுத்தது.
இந்த அழைப்பையே சந்திமால் நிராகரித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இலங்கை வீரர்கள் ஐ.பீ.எல். போட்டிகளில் பங்கு கொள்வது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைகளுக்கு இந்திய மத்திய அரசாங்கமும் இந்திய கிரிக்கட் நிர்வாக சபையும் சிறந்த தீர்வினை மேற்கொள்ளும் என தாம் நம்புவதாக இந்திய அணியின் முன்னாள் தலைவர் ராஹ_ல் ட்ராவிட் குறிப்பிட்டுள்ளார்.
இதன் ஊடாக கிரிக்கட் தொடர்ந்தும் உரிய தரத்தில் திகழும் என அவர் தெரிவித்துள்ளார்.
ரைம்ஸ் ஒப் இந்தியாவிற்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறை ஐ.பீ.எல்.போட்டிகளில் ராஜஸ்தான் ரோயல் அணியின் தலைவராக ராஹ_ல் ட்ராவிட் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் பங்குகொள்ளும் இலங்கை வீரர்களது பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மன் கிரியல்ல இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று கண்டி குருதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பாதுகாப்பு தொடர்பில் உறுதிமொழி அளிக்கப்படவில்லை என்றால் இலங்கை வீரர்கள் ஐ.பீ.எல் போட்டிகளில் பங்குகொள்ளாமல் இருப்பதே உகந்தது என்றும் லக்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இலங்கை தமிழர்கள் பிரச்சனை தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருவதாக அமைச்சர் வீ. நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த அவர், காங்கிரஸ் கட்சியே இலங்கை மக்களுக்கு அதிக அளவிலான நன்மைகளை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை இந்தியாவில் தடைசெய்ய வேண்டும் என தெரிவித்து வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தற்போது, அதனை மறந்து செயல்படுவதாக நாராயணசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.
Follow US






Most Viewed Stories