நடிகர் விவேக்கின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது!

Saturday, 17 April 2021 - 19:20

%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%21
மறைந்த நடிகர் விவேக்கின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இன்று மாலை 6 மணியளவில் மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் அவரது பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான சின்னக் கலைவாணர் விவேக், மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை 4.35 அளவில் காலமானார்.

இதையடுத்து, அவரின் பூதவுடல், விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, இன்று பிற்பகல் வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், அவரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதேநேரம், அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும், நடிகர் விவேக்கின் மறைவுக்கு, சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

அவர் தமது படங்களிலும் நிஜ வாழ்க்கையிலும் சுற்றுச்சூழல் மற்றும் சமூகம் மீது அக்கறை காட்டியவர் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் பிற்பகல் 4 மணியளவில் நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் சென்னை விருகம்பாக்கம் வீட்டில் இருந்து ஆரம்பமாகியது.

இறுதி ஊர்வலத்தில் அதிகளவான திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

78 மரியாதை வேட்டுக்கள் தீரக்கப்பட்டு மாலை 6 மணியளவில் மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இதேவேளை, நடிகர் விவேக்கிற்கு, நேற்று முன்தினம் முதலாவது கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், செலுத்தப்பட்ட தடுப்பூசிக்கும், அவருக்கு ஏற்பட்ட மாரடைப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

'சின்னக் கலைவாணர்' என அழைக்கப்படும் நடிகர் விவேக், 1961 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி மதுரையில் பிறந்தார்.

விவேகானந்தன் என்ற பெயரைக்கொண்ட விவேக், தமது பாடசாலைக் கல்வியை மதுரையிலும், அமெரிக்கன் கல்லூரியில் வர்த்தக இளங்கலைத் துறையில் இளங்கலை வணிகவியல் பட்டத்தையும் பெற்றார்.

பின்னர், அந்தத்துறையில், முதுகலைப் பட்டமும் பெற்ற அவர், சிலகாலம், தொலைப்பேசி இயக்குநராக பணியாற்றினார்.

அதன் பின்னர் சென்னைக்கு சென்று, 1987-ம் ஆண்டு, 'மனதில் உறுதிவேண்டும்' என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாத்துறையில் அவர் தடம்பதித்தார்.

இதையடுத்து, நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

இந்திய அரசால் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஃபிலிம்ஃபேர் விருது, தமிழக அரசின் மாநில விருது, சிறந்த ஆண் நகைச்சுவை நடிகருக்கான 'எடிசன் விருது' உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமினால் ஈர்க்கப்பட்ட விவேக், அவரது வழி நடத்தலில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காகக்கொண்டு செயற்பட்டதுடன், பாடசாலைகள் கல்லூரிகள், கிராமங்கள், சாலையோரங்களில் 33,23000 மரக்கன்றுகளை நாட்டியுள்ளார்.

தமது நகைச்சுவையில், சமூக சீர்திருத்தக் கருத்துக்களை தெரிவித்து, ரசிகர்களை சிரிக்க வைத்தமை மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்த பெருமைக்குரியவர் விவேக் என்பது குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips