General15 April 2025

சிறையில் கண்ணீர் விட்ட பிள்ளையான் - உதய கம்மன்பில

பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை சந்தித்துக் கலந்துரையாடியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 
 
நேற்றைய தினம் இந்த சந்திப்பு தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வெளிப்படுத்திய தகவல் குறித்து அவரிடம் எமது செய்திப்பிரிவு வினவியபோதே சட்டத்தரணி என்ற வகையில் தாம் சிவநேசத்துரை சந்திரகாந்தனை சந்திக்கச் சென்றதாக உதய கம்மன்பில கூறினார். 
 
இந்த விடயம் குறித்து கருத்துத் தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சட்டத்தரணியாக உதய கம்மன்பில, செயல்பட்டதன் காரணமாக, அவரது கோரிக்கையை நிறைவேற்ற அனுமதி வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். 
 
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுடன் அரை மணி நேரம் கலந்துரையாடும் வாய்ப்பு தமக்குக் கிடைத்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். 
 
அதன்போது, தாம் சிறைச்சாலையில் அனுபவித்துவரும் வேதனையான வாழ்க்கை குறித்து விளக்கியதாகவும் சில சமயங்களில் அவர் கண்ணீர் விட்டு அழுததாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறினார். 
 
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். 
 
அவர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்படுகிறார்.
Related recommendation
Hiru TV News | Programmes