எதிர்வரும் இரண்டு மாதங்களில் மரக்கறிகளின் விலை இயல்பு நிலைக்கு திரும்பும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கனமழையால் பாரிய அளவில் மரக்கறிப் பயிர்கள் அழிந்ததே மரக்கறி விலை உயர்வுக்கு காரணமாகும்.
விவசாயிகளுக்கு நாங்கள் வழங்கிய “நெட் ஹவுஸ்’களில் பயிர் செய்தததால் ஓரளவுக்கு மரக்கறிகள் சந்தைக்கு வந்தன.
2024 ஆம் ஆண்டில் தேசிய நுகர்வு இலக்கை அடைய நெல், சோளம், உருளைக்கிழங்கு மற்றும் மிளகாய் ஆகிய 4 வகையான பயிர்களின் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் ஏனைய பயிர் உற்பத்திகளை ஊக்குவிப்பதோடு, இந்த 4 வகைப் பயிர்களை முக்கிய இலக்காகக் கொண்டுள்ளோம்.
பெரிய வெங்காய பயிர்ச் செய்கையுடன், சின்ன வெங்காய உற்பத்தி வீழ்ச்சியடைந்தது.
எனவே இந்த ஆண்டு மீண்டும் சின்ன வெங்காய பயிர்ச் செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதன்படி, யாழ்ப்பாணம், மொனராகலை, தெலுல்ல, குருநாகல் மொரகொல்லாகம மற்றும் நியந்தகம ஆகிய இடங்களில் சின்ன வெங்காயச் செய்கையை பிரபலப்படுத்த தீர்மானித்துள்ளோம்.
அதேவேளை, பெருந்தோட்டத் துறையில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதுடன், தேயிலை கொழுந்தின் தரத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.